தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது மற்றும் பெரியார் படத்திற்கு மரியாதை செய்தது ஆகியவற்றிற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. குறிப்பாக பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் 'விஜய்யின் அரசியல் கட்சி குட்டி திமுக கட்சியாகவே இருக்கிறது' என விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் ஆயுத பூஜைக்கு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வாழ்த்து செய்தி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், ''ஒரு அரசியல் கட்சித் தலைவர் தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்வது ஆரோக்கியமான சூழ்நிலைதான். இன்றைய சூழ்நிலையில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்கள் எதிர்பார்கள். இந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் மக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்பதையும் தான் இது தெரிவிக்கிறது.
அதை விஜய் உணர்ந்து கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அதேபோல் தீபாவளி வாழ்த்தும் விஜய்யிடம் இருந்து எதிர்பார்க்கலாம். அவரிடம் இருந்து மட்டுமல்ல முதலமைச்சரிடம் இருந்தும் தீபாவளி வாழ்த்து எதிர்பார்க்கிறோம். அவர் வாழ்த்து சொன்னால் தான் நாங்கள் மகிழ்வோம் என்று அல்ல. எல்லோரும் ஓட்டு போட்டுள்ளார்கள். திமுக தலைவராக வாழ்த்து சொல்ல வேண்டாம் தமிழக முதல்வராக வாழ்த்து சொல்ல வேண்டும். விஜய் எப்படி திருத்திக் கொண்டாரோ அதுபோல தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். வாழ்த்து சொல்லவில்லை என்றால் தீபாவளியை கொண்டாடுபவர்கள் அவரை எதிர்ப்பார்கள்.
எங்களுடைய வேலை பாஜகவிற்கு உறுப்பினர்கள் சேர்ப்பது,கூட்டணி சேர்ப்பது அல்ல. கூட்டணி சேர்ப்பதை அகில இந்திய தலைமை பார்த்துக் கொள்ளும். தமிழக அரசு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. உதயநிதி வார் ரூமில் உட்கார்ந்து பார்த்தவுடன் முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்ததை போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள். எதற்கெடுத்தாலும் விளம்பரம் தான். மிகப்பெரிய வானியல் சாகசத்தை கூட மக்கள் மகிழ்ச்சியாக பார்க்க முடியாத அளவுக்கு ஏற்பாடு செய்ய முடியாத அரசு, எதற்கெடுத்தாலும் விளம்பரம் தான் செய்கிறது. மதுரை மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். இன்னும் அதிகமாக மழை வருவதைப் போல் தெரிகிறது. மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள் ஆனால் இந்த ஆட்சி நம்மை காப்பாற்றுமா என கவலையாக இருக்கிறது. திமுக ஆட்சியில் பருப்பு கூட வேகாது போல இருக்கு. துவரம் பருப்பு ரேஷனில் கிடைக்காது என்றால் எதுதான் கிடைக்கப் போகிறது. டெண்டர் விடப்பட்ட இடங்களில் துவரம் பருப்பு கூட சரியா கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. துவரம் பருப்பு கிடைக்க மறுக்கிறது. அதனால் விளம்பர ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது'' என்றார்.
Published on 14/10/2024 | Edited on 14/10/2024