அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிலிருந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து பரவலாக விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள 04 வது படை பிரிவில் 25 பேர் கொண்ட 10 குழு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். படை பிரிவின் சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார், சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் உள்ளோம். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டால் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.