அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவருமான இளங்கோவன் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (22/10/2021) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், திருச்சி, சென்னை சுமார் 20- க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் அ.தி.மு.க. தொண்டர்களை அச்சுறுத்த நினைக்கின்றனர். கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் வீடுகளில் சோதனை என்ற பெயரில் தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் அ.தி.மு.க. தொண்டர்களை அச்சுறுத்த நினைக்கின்றனர். தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் தி.மு.க. அரசின் தொடர் முயற்சிகள் முறியடிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.