கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன்பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பு ஊசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
இந்தச் சூழலில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனினும் இது குறித்து பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கோவையில் உள்ள புலியகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனாவின் புதிய திரிபான ஜே.என்.1 தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் முதன்முறையாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜெ.என். 1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்ததையடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.