ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கடந்த மூன்று ஆண்டுகளாகவே மகப்பேறு இறப்பு நடைபெறவில்லை என்ற தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்காக அங்கு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மா.சுப்பிரமணியன் தேநீர் விருந்து அளித்தார். அதனைத் தொடர்ந்து பரமக்குடி தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு நடைபெற்று வரும் மருத்துவமனை வளாக கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
உடனடியாக உயரதிகாரி ஒருவருக்கு கால் செய்த அமைச்சர், ''நான் ஹெல்த் மினிஸ்டர் பேசுகிறேன். பரமக்குடி ஜிஹெச்-ல் கட்டுமான பணியை 2023 பிப்ரவரி மாதம் ஆரம்பிச்சுருக்கீங்க. ஒன்றரை வருஷம் ஆகுது. இன்னும் ஒரு ப்ளோர் கூட வரவில்லையே. யார் கான்ட்ராக்டர்? எப்போ இதை கட்டி முடிப்பீங்க. இன்னும் 15 வருஷம் ஆகுமா? நீங்க இன்னைக்கு உடனடியாக வந்து ரிவ்யூ பண்ணிட்டு காண்ட்ராக்டர் சரியில்லை என்றால் அவரை பிளாக் லிஸ்டில் போட்டுட்டு வேற காண்ட்ராக்டர தேர்ந்தெடுங்க'' என்றார்.
தொடர்ந்து மருத்துவமனை தலைமைக்கு கால் செய்த மா.சுப்பிரமணியன், ''பரமக்குடி ஜிஹெச்க்கு வந்து பார்த்தீர்களா? எப்போ வந்து பார்த்தீங்க... நேற்று கூட வந்தீங்க. ஹாஸ்பிட்டல் முழுக்க இன்னும் ஜெயலலிதா படம் தான் இருக்கு. இன்னும் உங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தானா? எல்லா பேனர்களிலும் ஜெயலலிதா படம் தான் இருக்கு உங்க கண்ணுக்கு மட்டும் படவில்லை. அவ்வளவு அழகா நிர்வாகம் பண்றீங்க'' என்று டோஸ் விட்டார்.