பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாம் நாளான காணும் பொங்கல் தினமான இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்க இருக்கிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை துவங்கியுள்ளது. தற்பொழுது வரை மூன்று வீரர்கள் மருத்துவப் பரிசோதனையில் எடை குறைவு காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை பார்க்க ஜெர்மனியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் 50 பேர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுள்ளாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. மொத்தம் 1000 காளைகள், 500 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர்