சுதந்திரப் போராட்டத்தில், பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து 'வளரி', 'வேல்', 'ஈட்டி' போன்ற ஆயுதங்களால் போராடிய மக்கள், சீர்மரபினர் பழங்குடியினர் (டி.என்.டி) என்றழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள 68 சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள், மொத்தம் 2 கோடி மக்கள் உள்ளனர்.
வெள்ளையனை எதிர்த்ததற்காகப் பல ஆயிரக்கணக்கான டி.என்.டி. மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று கடலிலே கொட்டினார்கள் வெள்ளையர்கள். அவர்கள் காலத்தில் 'கண்காணிக்கப்பட வேண்டிய பழங்குடியினர்' (என்.டி.) எனவும் சுதந்திரத்திற்குப் பிறகு 'சீர்மரபினர் பழங்குடியினர்' (டி.என்.டி.) என்றும் அறிவித்து, அந்த மக்களுக்கு அனைத்து வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் மேலும் பல துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
1979-ல் எம்.ஜி.ஆரால் சீர்மரபினர் பழங்குடியினர் (டி.என்.டி.) என்பதை, சீர்மரபினர் சமூகம் (டி.என்.சி.) என மாற்றி சலுகைகள் குறைக்கப்பட்டது. அதன்பின் பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு 2019-ல், மீண்டும் சீர்மரபினர் பழங்குடியினர் (டி.என்.டி) என மாற்றப்பட்டது. அப்பொழுது மத்திய அரசின் சலுகைகளைப் பெற மட்டுமே டி.என்.டி. செல்லும் என்றும் மாநில அரசில் டி.என்.சி.யே தொடரும் எனவும் அரசு குறிப்பிட்டிருந்தது.
இதனால், ஒரே சான்றிதழ் டி.என்.டி. என வழங்க வேண்டும். கணக்கெடுப்பு நடத்தக்கூறி மத்திய அரசு வழங்கிய நிதியைக் கொண்டு டி.என்.டி. மக்களைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (28.12.2020) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்குப் போராட்டம் நடைபெற்றது.
பின்பு, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். இதில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் மற்றும் சீர்மரபினர் நலச் சங்க மாநிலச் செயலாளர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் மாநிலச் செயலாளர் காசிமாயத்தேவர், சீர்மரபினர் நலச்சங்கப் பிரச்சாரக் குழுத் தலைவர் செல்லப்பெருமாள் மற்றும் டி.என்.டி. குழுவின் மாவட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.