சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள மூலச்செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (35). பங்குதாரருடன் சேர்ந்து நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை இயக்கி வருகிறார். இவருடைய மனைவி திவ்யா (30). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வார்னிகா (3), தன்ஷிகா (2) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.
கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் விரக்தி அடைந்த திவ்யா, தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார். தனக்குப் பிறகு தன் இரு குழந்தைகளையும் பொறுப்புடன் யாரும் வளர்க்க மாட்டார்கள் என்று கருதிய அவர், பிப். 8- ஆம் தேதியன்று, அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றுக்கு சென்றார். அதில் இரு குழந்தைகளையும் முதலில் வீசி எறிந்தார். தண்ணீரில் மூழ்கிய பெண் குழந்தைகள் மூச்சுத்திணறி பலியாயினர்.
அதையடுத்து திவ்யாவும் கிணற்றில் குதித்தார். அவர் கிணற்றில் குதிப்பதை பார்த்துவிட்ட சிலர், உடனடியாக கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த திவ்யாவை உயிருடன் மீட்டனர். அவருக்கு தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கிணற்றுக்குள் வீசப்பட்ட குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டன.
இதுகுறித்து தம்மம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையில் திவ்யா அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:
எங்களுக்கு கல்யாணம் ஆனதில் இருந்தே, என் கணவரும், மாமியாரும் ஆண் வாரிசுதான் வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் எனக்கு அடுத்தடுத்து இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்தனர். இரண்டாவது பெண் குழந்தை பிறந்தபோதே நான் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால் மாமியார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அடுத்து, ஆண் குழந்தைதான் பிறக்கும். அதனால் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொள்ளக் கூடாது என்று தடை விதித்தார். ஏற்கனவே பிறந்த இரண்டு குழந்தைகளையும் நல்லபடியாக படிக்க வைத்து, ஆளாக்குவதே சிரமம் என்பதால், இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் மாமியார், கணவரின் பேச்சையும் மீறி குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
இந்த உண்மை தெரிய வந்ததில் இருந்தே மாமியாரும், கணவரும் அடிக்கடி என்னிடம் தகராறு செய்து கொண்டே இருந்தனர். பிப். 8ம் தேதியன்று காலை என் மாமியார், 'உன் முகத்தில் விழித்தாலே பாவம்தான் வந்து சேரும். வீட்டுக்கு ஒரு ஆண் குழந்தை பெற்றுத்தர முடியாதவள் எதுக்கு இருக்க வேண்டும்,' என்று திட்டினார்.
அதனால் மனம் உடைந்த நான், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். நான் போய்விட்டால் என் கு-ழந்தைகளை மாமியாரும், கணவரும் நிச்சயமாக நல்ல விதமாக வளர்க்க மாட்டார்கள். அதனால் குழந்தைகளையும் கொன்று விட்டு, நானும் தற்கொலைக்கு முயன்றேன். என் போதாத நேரம் என்னை காப்பாற்றி விட்டனர்,'' என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.