புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த 17ஆம் தேதி (17.01.2025) ஜெகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஜகபர் அலி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில், ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஆர். நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு, அவரது மகன் தினேஷ் குமார், ராமையா, ராசுவின் டிப்பர் லாரி வைத்துள்ள நண்பர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் காசி ஆகிய 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராமையாவை தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றொருபுறம் ஜெகபர் அலி கொலை வழக்கை விசாரித்து வந்த புதுக்கோட்டை போலீசார் சார்பில் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன்படி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.
அதே சமயம் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்த ராமையா நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதே சமயம் ஜெகபர் கொலை வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த வழக்கு தொடர்பாக கடந்த 24ஆம் தேதி (24.01.2025) முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாகச் செயல்பட்டதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகர் மீது புகார் எழுந்தாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த பணியிடை நீக்க உத்தரவு ஏன் என்ற கேள்விக்கு போலீசார் தரப்பில் வந்த பதில், 'திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் பணிக்கு வந்ததுமே குவாரி ஓனர்களை முதலில் பார்த்துள்ளார். அடிக்கடி அவர்களிடம் பேசியுள்ளார். மாதம் தவறாமல் குவாரி ஆட்கள் ஆய்வாளரை தனிமையில் சந்தித்து சென்றுள்ளனர். மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள குவாரி முதலாளி ராசுவின் மற்றொரு மகன் சுரேஷ். இந்த சுரேஷ் மீது 8 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அதனால் காவல் நிலைய குற்றப்பதிவேட்டில் உள்ளார். எச்எஸ் ரவுடியாக பதிவாகி உள்ளது. இவர் இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க வெளிநாடு செல்ல முயன்ற போது வழக்குகள் இடித்தது. ஆனால் ஆய்வாளர் குணசேகரன் வந்த பிறகு சுரேஷ் வெளிநாடு செல்ல வழக்குகளை மறைத்து விமானம் ஏற்றிவிட்டு பிறகு அதிகாரிகளிடம் தப்பிக்க சுரேஷ் சிங்கப்பூர் தப்பிச் சென்றதாக கூறியுள்ளார்.
இதுதவிர மேலும் பல சமூகவிரோத கும்பல்களிடமும் நட்புறவில் உள்ளார். அதேபோல ஜகபர் அலி கொலை சம்பவம் கூட இவருக்கு முன்பே தெரிந்து மறைத்துவிட்டடாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் டிஐஜி தற்போது பணியிடை நீக்கம் செய்துள்ளார்' என்றனர்.
மேலும், இன்னும் சில போலீசார், காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல்களை கொண்டு செல்ல வேண்டியவர்களுக்கும் கூட இந்த சம்பவம் தெரிந்தே நடந்திருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளதால் அவர்களைப் பற்றி விசாரிப்பதோடு அவர்களுடைய செல்போன் எண்களும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் ஏரியாவை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் பகிரும் நபர் மீதும் நடவடிக்கை இருக்கலாம். இது காவல் துறையில் அதேபோல் வருவாய்த்துறையிலும் நடவடிக்கை இருக்கும் என்கின்றனர்.