ஜாக்டோ - ஜியோ போராட்டகாரர்களின் கோரிக்கைகளின் மீது தமிழக அரசு கவனம் எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருவது தமிழக மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.
அவர்களது நியாயமான கோரிக்கைகளை பேசி தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ அமைப்பினரும் சுமுகமான முறையில் இப்பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அரசு ஊழியர்களின் முற்றுகை போராட்டத்தை ஒடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், கைது செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைத்து அரசு ஊழியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.