கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன்கள் ஆனந்தன் (25), ஹரி (20). இவர்கள் இருவரும் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தனர்.
நேற்று ஆனந்தனும், ஹரியும் தனது நண்பர் மதனுடன் சேர்ந்து பேரூர் பகுதிக்கு சென்றனர். பின்னர் காலை சுமார் 10.30 மணி அளவில், பேரூரில் இருந்து நாகராஜபுரம் செல்லும் சாலையில் உள்ள கொலராம்பதி குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
மூன்று பேரும் குடிபோதையில் இருந்தனர். அப்போது ஆனந்தனும், ஹரியும் தாமரை எப்படி மலர்ந்து இருக்கிறது அல்லவா? அதைப் பறிப்போமா? எனச் சொல்லிக் கொண்டே குளத்திற்குள் இறங்கி, தாமரை பூவை பறிக்க முயன்றனர். அப்போது நீரில் சேறு அதிகமாக இருந்ததால் அவர்கள் மூழ்க துவங்கினர்.
இருவருக்கும் சரியாக நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்துக்கொண்டு கத்தத்துவங்கினர். இதையடுத்து குளக்கரையில் நின்றிருந்த நண்பர் மதன், ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ எனக் கூச்சலிட்டார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில், யாரும் இல்லாததால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை.
சிறிது நேரம் கழித்து மதனின் குரல்கேட்டு அப்பகுதியில் இருந்த ஒரு சிலர் வந்து, நீரில் மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் இரண்டு பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் இருவரது உடலையும் சேற்றில் இருந்து மீட்டனர்.
வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வடவள்ளி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தலைமையிலான போலீசார் விரைந்துச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகரில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருவதால் குளங்களில் தண்ணீர் நிரம்பி அழகாக காட்சி தந்துவருகிறது. இதனால் குளத்தில் சேறு இருப்பதை அறியாமல் இறங்கி தாமரைப் பூவை பறிக்க முயன்று, தாமரையால் சகோதரர்கள் இருவரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.