பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு நேற்று (02.10.2023) வெளியிட்டது. நேற்று வெளியிட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 பேர் ஆவர். இவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் பொதுப் பிரிவினர் (GEN) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 15.52% ஆகும். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (BC) சேர்ந்தவர்கள். இது மொத்த மக்கள் தொகையில் 27.12% ஆகும்.
மேலும் 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (EBC) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 36.01% ஆகும். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (SC) பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 19.65% ஆகும். 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் (ST) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 1.68% ஆகும். இப்படியாக பீகார் மாநில அரசு நாட்டிலேயே முதன் முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும், சிலர் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தல்களை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்ற வலியுறுத்தலை வைத்துள்ளார். இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயல். அது ஒரு தவறான நடைமுறை' என கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.