கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இடையே வார்த்தை மோதல்கள் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து பல இடங்களில் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் அண்ணாமலை அடுக்கி வருகிறார். அதேபோல் செந்தில் பாலாஜி தரப்பிலும் பதில் தரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் 'செந்தில் பாலாஜியை எப்பொழுது அமலாக்கத்துறை கைது செய்யும்' எனக் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அண்ணாமலை '' வெயிட் பண்ணுங்க அமலாக்கத்துறை பிசியாக இருக்கிற மாதிரி தெரிகிறது அவங்க கொஞ்சம் ஃபிரீ ஆகிட்டு இந்த பக்கம் வருவாங்க. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவிற்கு கொடி தட்டுப்பாடு வராது. சில இடங்களில் பிரைவேட் கம்பெனிகள் ஸ்பான்சர் செய்கிறார்கள். குறிப்பாக திருப்பூர், கோயம்பத்தூரில் இருக்கும் தொழிலதிபர்கள் கதர் கொடிகளை குறிப்பிட்ட அளவு கட்சிக்கு கொடுக்க போகிறோம் எனச் சொல்லியுள்ளார்கள். அந்த கொடிகளை இலவசமாக மக்களுக்கு கொடுக்கப் போகிறோம்.
ஒரு லிட்டர் தண்ணியை அளவுகோலில் வைக்கும் பொழுது அது ஒரு கிலோ இருக்கும். ஒரு லிட்டர் பாலை அளவுகோலில் வைக்கும் பொழுது 1.03 கிலோ இருக்கும். சரிசமமாக பார்த்தால் தண்ணீரும், பாலும் ஒரே அளவுதான் இருக்கும். லிட்டரிலும் சரி, கிலோவிலும் சரி தண்ணீரும், பாலும் ஒரே அளவுதான் இருக்கும். ஆனால் நமது ஆவின் பால் பாக்கெட் அரை லிட்டர் பாலை எடுத்து எடைபோட்டால் 430 கிராம், 440 கிராம் தான் வருதுனு சமூக வலைத்தளங்களில் நிறையபேர் தெரிவித்து வருகின்றனர்.சில திமுககாரர்கள் மறுக்கிறார்கள். ஆனால் சைன்ஸ்படி ஒரு லிட்டர் பாலை எடுத்து வெயிங் மெஷினில் வைத்தால் 1.03 கிலோ அது இருக்க வேண்டும். அப்படி இருக்க அரைலிட்டர் பாலுக்கு 60 கிராம், 70 கிராம் மிஸ் ஆகும் பொழுது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு விற்கிற ஆவின் பால் பாக்கெட்டுகளை கணக்கிட்டுப் பார்க்கும்பொழுது அரசுக்கு வரவேண்டிய பணம் வராமல் இருக்கும் என நேற்று அறிக்கையாக கொடுத்திருந்தேன்''என்றார்.