ஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகளுக்கு இடைக்காலத்தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில், 1967-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக, தமிழக அரசால் மத்திய அரசுக்கு 333.30 ஏக்கர் நிலம், வென்லாக்டவுன்ஸ் (Wenlockdowns) மற்றும் புரூக்காம்ப்டன் (Brokompton) ஆகிய காப்புக் காடுகளின் பகுதியில் இருந்து இலவசமாக ஒதுக்கப்பட்டது. பிறகு, ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் பணிகள் மட்டும் நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை எடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் மூலம், இந்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், தற்போது தங்கள் கட்டுபாட்டில் 173.16 ஏக்கர் மட்டுமே உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில், 292.17 ஏக்கர் நிலத்தை மீண்டும் எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தை மீண்டும் எடுக்கும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவின் அடிப்படையில் நடக்கும் அனைத்து பணிகளுக்கும் தடைவிதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், ஊட்டியில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, அனைத்து பணிகளுக்கும் தடைவிதிக்க மறுத்த நீதிபதி, ஊட்டியில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான பணிகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும், வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை அந்த நிலத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.