தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த பிப். 26ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அப்போது முதல், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல், மார்ச் 12ஆம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி முடிவடைகிறது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களின் விவரம் வருமாறு:
கெங்கவல்லி:
கெங்கவல்லி தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலரான அமுதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தொடர்புக்கு: 9445000222.
ஆத்தூர்:
ஆத்தூர் தனி தொகுதிக்கான வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியருமான துரையிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். ஆத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும். தொடர்புக்கு: 94450 00434, 75987 02331.
ஏற்காடு:
ஏற்காடு பழங்குடியினருக்கான தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியும், சேலம் முத்திரைக் கட்டணப் பிரிவு தனித் துணை ஆட்சியருமான கோவிந்தனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும். தொடர்புக்கு: 96299 94666.
ஓமலூர்:
ஓமலூர் தொகுதிக்கான வேட்பாளர்கள், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளருமான (நிலம்) கீதா பிரியாவிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். தொடர்புக்கு: 94988 42848.
மேட்டூர்:
மேட்டூர் தொகுதிக்கான வேட்பாளர்கள், மேட்டூர் சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சரவணனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும். தொடர்புக்கு: 94450 00435.
எடப்பாடி:
எடப்பாடி தொகுதிக்கான வேட்பாளர்கள் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியும், சேலம் கலால் பிரிவு உதவி ஆணையருமான தனலிங்கத்திடம் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். தொடர்புக்கு: 94450 74592.
சங்ககிரி:
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான வேடியப்பனிடம் சங்ககிரி தொகுதிக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும். தொடர்புக்கு: 94449 09084.
சேலம் மேற்கு:
சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியும், சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியருமான சத்தியபால கங்காதரனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும்.
சேலம் வடக்கு:
சேலம் வடக்கு தொகுதிக்கான வேட்பாளர்கள், சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். சேலம் வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மாறனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தொடர்புக்கு: 94450 00433.
சேலம் தெற்கு:
சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியும், சேலம் மாநகராட்சி ஆணையருமான ரவிச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். இத்தொகுதிகான வேட்பாளர்கள் சேலம் அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். தொடர்புக்கு: 94892 94899.
வீரபாண்டி:
வீரபாண்டி தொகுதிக்கான வேட்பாளர்கள், உத்தமசோழபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரியுமான பண்டரிநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தொடர்புக்கு: 86108 43987.
இணைய வழியிலும் தாக்கல் செய்யலாம்:
இத்தேர்தலில் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை இணையவழி மூலமாகவும் தாக்கல் செய்யும் வசதியையும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இணையவழி மூலம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு http://suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து, பின்னர் அதனைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு படிவம் 2ஏ, உறுதிமொழிப் படிவம், படிவம் 26, அஃபிடவிட் படிவம், சுய விவரங்கள் குறித்த படிவம், வேட்பாளரின் மாதிரி கையொப்பத்திற்கான படிவம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகியவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சனி, ஞாயிறு கிடையாது:
வேட்புமனுக்களை மார்ச் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு குறைந்தபட்சம் ஒருநாள் முன்னதாக, தேர்தல் செலவு கணக்குகளைப் பராமரிப்பதற்காக வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவருடைய முதன்மை முகவர் ஆகிய இருவர் பெயரில் கூட்டாகவோ, வங்கியில் பிரத்யேக கணக்கு தொடங்கி, அதன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் அதிகபட்சம் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்பவர் மற்றும் அவருடன் 2 நபர்கள் என அதிகபட்சம் 3 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
சுயேச்சை வேட்பாளர்களை அடையாளம் காட்டுவதற்கு 10 நபர்கள் உடன் வந்தாலும், மனுத்தாக்கலின்போது அவருடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வேட்புமனுவை, வேட்பாளரோ அல்லது முன்மொழிபவரோ தாக்கல் செய்யலாம். மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் மற்றும் அவருடன் வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்புமனு கட்டணம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 8 தொகுதிகளுக்கும் தேர்தல் வேட்புமனு கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக அல்லது ஆர்பிஐ அல்லது கருவூல சலான் மூலம் செலுத்த வேண்டும்.
வேட்பாளர் பட்டியல் சமூகத்தினராக இருக்கும்பட்சத்தில் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் அதற்கான சாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவோ அல்லது ஆர்பிஐ அல்லது கருவூல சலான் மூலமாகவோ செலுத்தலாம்.
வேட்புமனுக்கள் மார்ச் 22ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமன் தெரிவித்துள்ளார்.