!['' It causes mental anguish '' - PM Modi upset!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ehpe5vwCDUIZ2Jock8bFTwlTca8qQFv8c7J3EnPw45I/1619002714/sites/default/files/inline-images/ftututr_0.jpg)
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில், டேங்கரில் இருந்து ஆக்சிஜன் நிரப்பும்போது, ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். ஆக்சிஜன் வாயுக் கசிவைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டேங்கர் வால்வில் ஏற்பட்ட பழுதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள மஹாராஷ்ட்ரா அரசு, இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் தப்பிக்கமுடியாது எனவும் மஹாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஆக்சிஜன் வாயுக் கசிவால் நாசிக்கில் 22 நோயாளிகள் இறந்த சம்பவம் வலியைத் தருகிறது. உயிரிழந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்'' எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 8.45 மணிக்கு காணொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகையில், ''ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் தைரியத்துடன் போராட வேண்டும். ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நாம் பூர்த்தி செய்வோம். நாட்டில் மருந்து நிறுவனங்கள் உள்ளன. எனவே கவலை தேவையில்லை. இதுவரை 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த விலையில் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படுகிறது'' எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.