Skip to main content

இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

ISRO Scientist Varakmati passed away Obituary of Chief Minister M. K.Stalin

 

தமிழ்நாட்டின் அரியலூரைச் சேர்ந்த விஞ்ஞானி வளர்மதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) ‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்’ பணியாற்றி வந்தார். அரியலூரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று பின்னர் அண்ணா பல்கலைக் கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 1984ல் இஸ்ரோவில் சேர்ந்த வளர்மதி இன்சாட் 2ஏ, ஐஆர்எஸ் ஐசி, ஐஆர்எஸ் ஐடி, டிஇஎஸ் போன்ற திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.

 

மேலும் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை 10, 9 என்ற கவுண்டவுன் தொடங்கி விண்கலம் அதன் சுற்று வட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது என்பது வரை அறிவிக்கும் ‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்’ ஆகவும் பணியாற்றியுள்ளார். கடைசியாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் - 3 செயற்கைக் கோள்களை ஏந்திச் சென்ற பி.எஸ்.எல்.வி சி56 ராக்கெட் நிகழ்வின் கவுண்டவுனை வளர்மதி வர்ணனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. உடல்நலக் குறைவால் கடந்த மூன்று நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த வளர்மதி, நேற்று சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த வளர்மதி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் (Mission Range Speaker) வளர்மதி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். மிகவும் சவாலான ஒரு பணியைத் திறம்படக் கையாண்டு, இஸ்ரோவின் முக்கியத் திட்டப்பணிகளுடைய வெற்றித் தருணங்களின் குரலாக ஒலித்த வளர்மதி மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது பணியிடத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்