தமிழகத்தில் கடந்த ஜீலை 10ஆம் தேதி 51 காவல்துறை உயர் அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றி உத்தரவிட்டார் உள்துறைச் செயலாளர். அதில் திருச்சி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு உயர் அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகரின் துணை ஆணையர் நிஷா சென்னை அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்ட்டதால் திருவள்ளூர் மாவட்ட துணைக் காவல்துறை கண்காணிப்பாளர் (ASP) அல்லடிப்பள்ளி பவன்குமார் ரெட்டி - திருச்சி மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதே போன்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டதால் அங்கிருந்த ஜெயசந்திரன் திருச்சி மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இப்படிப் பணி இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் பலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
திருச்சி மாநகர துணை ஆணையர் நிஷா பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொண்டார். ஆனால் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்ட பவன்குமார் ரெட்டிக்கும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெயசந்திரனுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் இரண்டு உயர் அதிகாரிகளும் பொறுப்பேற்றுக் கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.