![Investing in cryptocurrency .... where is the thangamani.. supporters gathered in front of the house!](http://image.nakkheeran.in/cdn/farfuture/RxWtJH5VNaeOA_vJ6cBdQ8pdUL1tXHHbHSrnRjbKN00/1639537104/sites/default/files/inline-images/000000023_0.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், இன்று (15.12.2021) முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஆலம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது. நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 14 இடங்களிலும், வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, கர்நாடகா, ஆந்திரா என மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணி மகன் தரணிதரன் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல், சேலம் ரெட்டிபட்டியில் உள்ள அஷ்வா பார்க் ஹோட்டல் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தங்கமணியின் சம்பந்தி சிவசுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வசந்தி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது. வேலூரில் காட்பாடி அருகே செங்குட்டையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.
![Investing in cryptocurrency .... where is the thangamani.. supporters gathered in front of the house!](http://image.nakkheeran.in/cdn/farfuture/1bUveB8WwE4KDMZyvZET9yBvxUuM5WZkjC3yi3mTpW4/1639537123/sites/default/files/inline-images/888889_0.jpg)
தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடைபெறுவதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி அவரது சொந்த ஊரான கோவிந்தம்பாளையம் இல்லத்தில் இருப்பதாகவும், அவர் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அவரிடம் துருவித் துருவி விசாரணை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. வீட்டின் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்கள் இந்த சோதனையை எதிர்த்துக் கோஷமிட்டனர்.