சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு தேர்தல் ஆணையத்தில் வழக்கு இருந்ததால் நவம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில் மதுசூதனன் தரப்பினர் கட்சியின் பெயரையும், இரட்டை இலையையும் பயன்படுத்தலாம் என கூறியது. அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்று எங்களை கூறியதால் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
எங்களுக்கு குக்கர் சின்னமும், அணி செயல்பட ஒரு பெயரும் வேண்டும் என்று கேட்டோம். தனியாக கட்சியை ஆரம்பித்தால் என்னுடைய உரிமையை இழக்க நேரிடும். வழக்கை நடத்த உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது. அ.தி.மு.க. அம்மா அணி வேண்டும் என்று கேட்கவில்லை. 3 பெயர்களை எழுதிக்கொடுத்து அதில் ஒன்று வழங்க வேண்டும் என்று கோரியிருந்தோம்.
அதன் அடிப்படையில் தான் 3 வாரத்திற்குள் குக்கர் சின்னத்தையும், அவர்கள் விரும்பி கேட்கும் பெயரையும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பதிவு பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக எங்களுக்கு வழங்க கூறியுள்ளனர். சின்னமும் கட்சியின் பெயரும் வழங்க உள்ளனர். எங்களுக்காக ஒரு கொடியை அறிமுகப்படுத்தப்போகிறோம்.
அந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும். வேறுவிதமாக தீர்ப்பு இருந்தால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் வரை இந்த பெயரும், சின்னமும் இருக்கும். எனவே இது ஒரு தற்காலிக அமைப்பாகத்தான் இருக்கும்.
மதுரையில் கட்சியின் பெயர், கொடி அறிவிக்கக்கூடிய நாளில் ஸ்லீப்பர் செல்கள் யாரும் வரமாட்டார்கள். சட்டசபையில் ஓட்டெடுப்பின்போது தான் ஸ்லீப்பர் செல்கள் தெரியவரும். இவ்வாறு கூறினார்.