Skip to main content

வருமான வரி வழக்கு: பதில் அளிக்க சசிகலாவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

Income tax case; High Court orders Sasikala to file reply

 

குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமானவரி அபராதத்தைக் கைவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 

சசிகலா, கடந்த 1994 - 95ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலில் 28 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்க்கு கணக்கு தாக்கல் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், சசிகலா அதே நிதியாண்டில் 80 ஏக்கர் நிலத்தை வாங்கி கணக்கில் காட்டாமல் மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 1994 - 95ஆம் ஆண்டுக்கான வருமான வரியாக 48 லட்சம் ரூபாய் செலுத்தும்படி சசிகலாவிற்கு 2002ஆம் ஆண்டு வருமானவரித்துறை உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை வருமான வரிக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்துசெய்தது. இந்நிலையில், இது தொடர்பாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான அபராத தொகை உள்ள வழக்குகளைக் கைவிடுவதாக மத்திய அரசின் நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தின் சுற்றறிக்கையைப் பின்பற்றி, தனக்கு எதிரான வருமானவரித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதற்கு வருமானவரித்துறை தரப்பில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கை சசிகலா வழக்கிற்குப் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், சத்திகுமார் சுகுமார ஹருப் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில், குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளார். எனவே, அபராத தொகையைக் கைவிடும் சுற்றறிக்கை சசிகலா தொடர்ந்த வழக்கிற்குப் பொருந்தாது என்றும் அவருக்கு வருமான வரித்துறை விதித்த அபராத தொகையைக் கைவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

 

இதனைப் பதிவுசெய்த நீதிபதிகள், வருமான வரித்துறை விளக்கத்திற்குப் பதிலளிக்க சசிகலாவிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்