கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவராக, ராஜேஸ்வரி சரவணகுமார் கடந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்.
இந்த நிலையில் துணைத் தலைவராக உள்ள மாற்று சமூகத்தைச் சார்ந்த மோகன்ராஜான் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அதே சமூகத்தில் உள்ள வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகிய இருவரையும், ஊராட்சி கூட்டங்களில் தரையில் அமர வேண்டும் எனவும், தேசியக்கொடி ஏற்றக் கூடாது எனவும் உத்தரவிட்டு ஊராட்சி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தள்ளார். மேலும் ஊராட்சி தலைவரை எந்தப் பணியும் செய்யவிடமால் தடுத்து அவமானப்படுத்தியுள்ளனர். இதற்கு ஊராட்சி செயலாளர் சிந்துஜா துணையாக இருந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணக்குமார், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்திற்கு மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது இவர் வெளியே நிற்கும்போது, இவரது மனைவியான ஊராட்சி தலைவர் மற்றும் தலித் வார்டு உறுப்பினரை தரையில் அமரவைத்து கூட்டத்தை நடத்தியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியுற்ற அவர், கையில் வைத்திருந்த செல்ஃபோன் மூலம், அவர் கீழே உட்கார்ந்திருந்ததை படம் எடுத்துள்ளார். மேலும் இந்தப் படம் வேறு இடத்தில் எடுத்தது என்று யாரும் சொல்லிவிடகூடாது என்று கூகுள் லொக்கேசன் வைத்துப் படத்தை எடுத்துள்ளார்.
பின்னர் இது வெளியே தெரிந்தால் ஊரின் ஒற்றுமை குலைந்துவிடும் என்றும் என்றாவது ஒரு நாள் மாறிவிடுவார்கள் என்றும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊராட்சி செயலாளரும் மாற்று சமூகம் என்பதால் மாற்று சமூகத்தைச் சார்ந்த வார்டு உறுப்பினர்கள் அதிகமாக உள்ளதால், அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கூட்டத்தை நான் சொல்லும்போதுதான் கூட்ட வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த ஊராட்சி தலைவரின் கணவர் அப்போது எடுத்த படத்தை வெளியிட்டார்.
இதுகுறித்த செய்தி வெளியானதின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு, அம்மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி, கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கார, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிதுறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் என மாவட்ட நிர்வாகமே தெற்குதிட்டை கிராமத்தில் குவிந்தது.
இதனைத் தொடர்ந்து தெற்கு திட்டை ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், ஊராட்சியில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் தலைவரிடம் பூட்டிய அறையில் விசாரணை மேற்கொண்டார். இதுபோன்ற சம்பவம் மறுபடியும் நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி உறுப்பினர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “சம்பவம் குறித்து நேரடியாக விசாரணை மேற்கொண்டோம். இதற்கான விசாரணை வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை என்ற மூன்று விதமாக நடைபெற்றுவருகிறது. தற்போது சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வழக்குப் பதிவு செய்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி துணைத்தலைவர் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருக்கு நோட்டீஸ் கொடுத்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசியக் கொடி ஏற்றியது குறித்து விரிவான விசாரணை நடைபெறும். மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என அவர் கூறினார்.
துணைத்தலைவர் மோகன்ராஜன், "அவர்களை உட்காரச் சொல்லுவோம். அவர்கள் உட்கார மாட்டார்கள். தரையில் உட்காருவேன் என்று கூறுவார்கள். தேசியக் கொடியை அவர்கள் ஏற்றமாட்டேன் என்பார்கள் அதனால் நாங்கள் ஏற்றுவோம்" என்கிறார்.
இதுகுறித்து புவனகிரி மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சதானந்தம், "சம்பந்தபட்ட ஊராட்சியில், துணைத் தலைவர் இல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் காசோலையைக் கையாள உத்தரவிட வேண்டும். அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புவனகிரி காவல் நிலையத்திற்கு முன்பு அமர்ந்து சம்பந்தபட்ட துணைத் தலைவரை கைது செய்யவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊராட்சியில் நடப்பதுபோல் மாவட்டத்தின் பல இடத்திலும் நடைபெறுகிறது. இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.