பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய புகாரின் பேரில் நெல்லை கண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெல்லை கண்ணன் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து நெல்லைக் கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
நெல்லை கண்ணன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, நெல்லைக் கண்ணனை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில், பா.ஜ.க சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லைக் கண்ணன் மீது நெல்லை காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது 504, 505(1), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பேச்சாளர் நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் 50- க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்த காவல்துறையினர் பின்னர் விடுவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய புகாரின் பேரில் நெல்லை கண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை கைது செய்த காவல்துறையினர், நெல்லைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் கூறுகின்றனர்.