அமமுகவிற்கு சில பூத்களின் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் பூஜ்ஜியம் என காட்டியுள்ளது. நாங்கள் கணக்கெடுத்ததன்படின் 300 வாக்குச்சாவடிகளில் எங்களுக்கு பூஜ்ஜியம் என காட்டுகிறது. எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? முகவர்கள் வாக்குகள் கூட பதிவாகாமல் போனது பற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் தர வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர் இதற்கு பதில் கூறுகையில்,
அமமுக முகவர்கள் ஏமாற்றினார்களா என தினகரன் ஆராய வேண்டும் எனக் கூறினார். தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி சிலர் வெற்றி பெற்று விட்டனர் எனக் கூறிய தமிழிசை, எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக வெளியாகும் தகவல் தவறானது. அதேபோல் தமிழகத்தில் உள்ள களத்தை பற்றியும், என்னைப் பற்றியும் மத்திய தலைமைக்கு நன்றாக தெரியும். தமிழக பாஜக தலைமை மீது தேசிய தலைமை கோபமாக இருப்பதாக வெளியான தகவல் தவறானது என தெரிவித்தார்.