தூத்துக்குடியின் விளாத்திகுளம் பக்கமுள்ள பூதலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறவர் ராஜாமணி (68) இவரது கணவர் பிச்சையா 12 ஆண்டுகட்கு முன்பே காலமாகிவிட்டார். மகன்கள் இருவரும் வெளியூரில் கூலி வேலை செய்து வருபவர்கள். எனவே மூதாட்டி ராஜாமணி தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ராஜாமணியை மர்ம நபர்கள் அளிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த புதூர் மற்றும் காடல்குடி போலீசார் ராஜாமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து ராஜாமணியின் பக்கத்து வீடும் திறந்து கிடந்ததால் அங்கு தனியாக வசித்து வந்த பொன்னுசாமி (60) என்பவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அடுத்தடுத்து நடந்த இரட்டைக் கொலை அதிர்ந்து போனது அக்கம் பக்கம் ஏரியா பகுதிகள்.
பின்னர் அமைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பூதலாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரைக் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் சுப்பையா அளித்த வாக்குமூலத்தில், ராஜாமணி நடத்தி வந்த பெட்டிக் கடையில் நான் அடிக்கடி பீடி மற்றும் சிகரெட் வாங்குவேன். தவிர நான் அடிக்கடி மதுக்குடித்து விட்டு வருவதால் ராஜாமணி பல முறை என்னைத் திட்டியுள்ளார். ஊர் மக்களிடம் என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். இதே போன்று முடி திருத்தம் தொழில் செய்து வந்த பென்னுசாமியும் என்னைப் பற்றி மக்களிடம் அவதூறாக கூறியுள்ளார் இவர்களின் பேச்சால் ஆத்திரமடைந்த நான் ராஜாமணி, பொன்னுசாமி இருவரையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன்.
அதே ஆத்திரத்தோடு சம்பவத்தன்று அதிகாலை பொன்னுசாமி வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றேன். அடுத்து ராஜாமணியையும் அதே அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன் என்று வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், தப்பியோடப் பயன்பட்ட இரு சக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்தனர். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி ரிமாண்ட் செய்தனர். அவதூறாகப் பேசியதால் வெட்டிக் கொன்றேன் என்கிற வாக்குமூலம் ஏரியாவைக் கலக்கியிருக்கிறது.