![thittakudi](http://image.nakkheeran.in/cdn/farfuture/r_PQMSRDyr1GIoNrIaYkbJyD7y3lToYT2Lxt30tU6Eo/1593279321/sites/default/files/inline-images/rtrt_1.jpg)
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள பெருமுளை ஊராட்சிக்கு உட்பட்ட 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் கடந்த ஆண்டு முதல் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி, பெருமுளை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஏரிகளில் நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் வந்ததால் விவசாயிகள், கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியும் பலனும் அடைந்தனர்.
இந்த சூழ்நிலையில் பெருமுளை ஏரியில் மீன்பிடிக்க பொதுபணித்துறை அதிகாரிகள் குத்தகைக்கு விடுத்துள்ளனர். குத்தைகைக்கு எடுத்த மீன்பிடி குத்தகைதாரர்கள் மீன் பிடிப்பதற்காக ஏரியில் உள்ள மதகை இரவோடு இரவாக உடத்து தண்ணீரை நான்கு பகுதிகளிலும் திறந்து விட்டனர். இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து நாசமாகியது.
![thittakudi](http://image.nakkheeran.in/cdn/farfuture/x_as5-_TRtWP6bzK_MnTDJEldw7sDUpfMU_XiCGlwRk/1593279363/sites/default/files/inline-images/ytyt.jpg)
அதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏரிக்கரையில் திரண்டு மாவட்ட நிர்வாகத்தையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் கண்டித்தும், நீரை திறந்துவிட்ட குத்தகைதாரர்களை கண்டித்தும், 'விவசாயம் செய்வதற்கு தண்ணீர் விட்டீர்களா அல்லது மீன் பிடிப்பதற்காக தண்ணீர் விட்டீர்களா... என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தும் யாரும் வந்து நடவடிக்கை எடுக்காததால், ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் அதிகாரிகள் வரும்வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதுபற்றி தகவலறிந்த திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குத்தகைதாரர்களிடம் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வெளியேற்றக்கூடாது என்று உத்தரவிட்டனர். அதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.