சீர்காழி அருகே நெப்பத்தூரில் செயல்பட்டுவரும் ஆர்.கே.பி சேம்பரில் கூலித்தொழிலாளி ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருப்பதாக உறவினர்களும், அப்பகுதி மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழசட்டநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(42). இவர் வீட்டின் அருகே உள்ள ஆர்.கே.பி சேம்பரில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்துவருகிறார். கடந்த சில மாதங்களாகவே சேம்பர் உரிமையாளர், சீனிவாசனுக்கு கூலிபாக்கி வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். கூலி தொகையை கேட்க செல்லும் பொழுதெல்லாம் சேம்பர் உரிமையாளருக்கும் அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை பணிக்கு சென்றவர் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இந்ததகவலை அறிந்த உறவினர்களும், கிராம மக்களும் ஒன்றுகூடி நெப்பத்தூரில் உள்ள சேம்பர் முன்பு உயிரிழந்த சீனிவாசனை மர்ம நபர்கள் கொலை செய்து தூக்கிலிட்டுவிட்டதாக கூறி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் வட்டாட்சியர் ஹரிஹரன் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த சேம்பரில் வடமாநிலத்தவர்களே அதிகம் பணிபுரிந்து வருகின்றனர். சேம்பரின் உள்ளே இதுவரை தொடர்ந்து 4 முறை உள்ளூர் கூலித்தொழிலாளிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்கிறார் கூலி தொழிலாளி ஒருவர்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து அவர்களை வெளியேற சொல்லி அவர்கள் வைத்திருந்த பொருட்களை சேதப்படுத்தினர் இதனால் மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து 8 மணி நேரமாக உறவினர்களும் மற்றும் கிராம மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடார்.
அதனைத் தொடர்ந்து சேம்பர் உரிமையாளர்களான வடமாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ்சாந் மற்றும் சித்தார்த், சேம்பர் மேலாளர் முருகன் மற்றும் சரவணனை திருவெண்காடு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும் சேம்பர் முன்பு பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.