புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் மாங்காடு கிராத்தைச் சேர்ந்தவர் முழுகேசன். இவருக்கு மனைவி மற்றும் 5, 3 வயதுகளில் ஆண் குழந்தைகள் உள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு ஊராட்சி செயலராகப் பணியில் சேர்ந்தார். அரயப்பட்டி ஊராட்சியில் சில வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்தபோது இடமாறுதல் கிடைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்று சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டார்.
அதன் பிறகு புளிச்சங்காடு அண்ணாநகர் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கொண்டு பள்ளத்திவிடுதி ஊராட்சி செயலராகத் தற்போது வரை பணியாற்றி வந்தார். அங்கு ஊராட்சிக்கு ரூ.8 ஆயிரம் வரை பணம் செலுத்த வேண்டியுள்ளது. அந்தப் பணம் அலுவலகத்தில் செலுத்தப்படாத நிலையில் அவருக்குக் கடந்த 10 மாதங்களாகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு செலவுக்கே வழியின்றி தவித்து வருவதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்கள் வாட்ஸ் அப் குழுவில் வேதனையைப் பகிர்ந்துள்ளார். சம்பளம் இல்லாததால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் கடந்த ஒரு மாதமாக ஊராட்சி வேலைக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்குச் சென்றவர் மதியம் ஒரு படம் மற்றும் பதிவு ஒன்றை நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க முடியவில்லை. வீட்டுச் செலவுகளையும் சமாளிக்க முடியவில்லை. அதனால் கடும் மனஉளைச்சலில் இருப்பதால் மதுவில் விஷம் கலந்து குடிக்க போகிறேன் என்று பதிவிட்டு மதுவில் விஷம் கலந்த படத்தையும் அனுப்பிவிட்டு செல்ஃபோனை சுவிட்ஸ் ஆஃப் செய்துவிட்டார். அந்தப் பதிவைப் பார்த்த நண்பர்கள் அவரை நீண்டநேரம் தேடி சிகிச்சைக்காக தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பளம் இல்லை என்ற மனஉளைச்சலில் இருந்து குடும்பதைக் காப்பாற்ற முடியவில்லை என்ற விரக்த்தியி்ல மதுவில் விஷம் கலந்துத் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி செயலர் முருகேசன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்குவதுடன் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அவரது நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.