பணியில் இருந்த மின் வாரிய ஊழியர்கள் உயிரிழப்பிற்குக் காரணமான அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய டான்ஜெட்கோவிற்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று மழை பெய்ததில் சென்னை பிராட்வே கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள ஆவுடையப்பன் நாயக்கன் தெருவில் மின் தடை ஏற்பட்டது. அங்குள்ள மின்மாற்றியில் வியாசர்பாடியைச் சேர்ந்த வின்சென்ட், எண்ணூரைச் சேர்ந்த உதயா ஆகிய மின் வாரிய ஊழியர்கள் பணியாற்றியபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
இதுதொடர்பான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மரணத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.