
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று முழக்கங்கள் எமுப்பி, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் கூடி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது அதிகார மையமாக மத்திய அரசு செயல்படுவது தவறானது எனக்கூறிய மருத்துவர்கள் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 15 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்துவது, ஏழை மாணவர்களை பாதிக்கும் என்றும், மாற்று மருத்துவ முறை மருத்துவர்கள் இணைப்பு பயிற்சி என்ற பெயரில் அலோபதி் மருத்துவம் பார்க்க அனுமதிப்பது மருத்துவ சமுதாயத்திற்கு எதிரானது என்றும் கூறினர்.
அதேசமயம் பிரசவம், உள்நோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பணிகளில் மருத்துவர்கள் ஈடுபடுவார்கள் என்றும் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.