கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்றும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை, ரேஷன்கடை ஊழியர்கள் திருடுவதாகவும் செய்தியையும் வெளியிட்டது சிம்பிளி சிட்டி வெப்.
இதனைக் கண்ட மாநகராட்சி துணை ஆணையர் சுந்தர்ராஜன், தனது புகாரில் சுட்டிக்காட்டி இந்த இரண்டு செய்திகளும் அரசு ஊழியர்களை கேவலப்படுத்துவதோடு, அரசுக்கு எதிராக மக்கள் போராடுவதற்கு தூண்டும் வகையில் இருப்பதாகப் புகார் அளித்தார்.
மேலும் கோவை சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ கார்த்தி சிம்ப்லிசிட்டி ஆன்லைன் செய்தி சேனலில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கரொனோ தடுப்பு முயற்சி என பெயருக்கு தான் விளம்பரம் செய்கிறார். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். மற்றபடி உருப்படியாக எந்த வேலையும் கரோனோ தடுப்புக்காக எந்த துரும்பையும் எடுத்துப் போடவில்லை எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இந்தச் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் பாலாஜி என்பவரையும், செய்தியாளர் ஜெரால்ட் என்பவரையும் விசாரணைக்கு அழைத்திந்தது காவல்துறை. பதிப்பாளர் ஆண்ட்ரூ சாம்ராஜ் பாண்டியனையும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் கோவை பத்திரிகையாளர்கள் குவிந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்தனர். பதிப்பாளர் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.