![incident in pennadam](http://image.nakkheeran.in/cdn/farfuture/1_tEXRdqzgwAOsnJv4l45G0p2vhZvcaazA3junoLKp0/1597840188/sites/default/files/inline-images/DXGD.jpg)
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கனகசபை(42). கூலித் தொழிலாளியான இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மூர்த்தி ஆகியோருக்கும் நீண்டகாலமாக இடம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்துள்ளது. வருவாய்த் துறையில் இடத்தை அளக்க பணம் கட்டி, பல முறை சர்வேயரை அழைத்தும், அவர் அளந்துதந்தபாடில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பிரச்சினை ஏற்பட்டதால் பெண்ணாடம் காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளார். ஆனால் அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (18.08.2020) பக்கத்து வீட்டுக்காரர் வீடு கட்ட ஆரம்பித்துள்ளார். தற்போது அந்த இடத்தை அளிக்காமல் வீடு கட்டினால் தன் இடம் போய்விடும் என்பதால் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு புகார் அளிப்பதற்காக அவர் புகார் எழுதிக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அந்தப் புகாரை போலீசார் வாங்க மறுத்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த கனகசபை பெண்ணாடம் பேரூராட்சி மற்றும் காவல் நிலையம் பின்புறம் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறிக்கொண்டு போராட்டம் செய்தார். மேலும் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று சமரசம் செய்து கனகசபை பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்ததால் கனகசபை கீழே இறங்கி வந்தார். அதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கனகசபையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் கனகசபையின் கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இருந்துள்ளது. இதனால் அவர் செல்போன் டவரின் உச்சியில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகல் நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.