![incident salem](http://image.nakkheeran.in/cdn/farfuture/2uaIT5lwEsmq3LiKNBv4U2gSnrrd41L8U4Ij7QBfGww/1603818552/sites/default/files/inline-images/adasfsfsfsfs.jpg)
சேலம் மாவட்டம் ஓமலூர் குதிரைகுட்டிபள்ளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் (19 வயது) வீரப்பன். கட்டிட தொழிலாளி. இவர் சென்ற ஒன்றரை மாதமாக ஈரோடு மோளகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது அத்தை செல்லம்மா என்பவர் வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த ஒரு வாரமாக மோளகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், திருநாவுக்கரசு, கோகுலகிருஷ்ணன்ஆகிய மூன்று பேருடன் சேர்ந்து கட்டிட சென்டிரீங் வேலைக்கு சென்றுள்ளார். சென்ற 24 ந் தேதி சனிக்கிழமை இரவு கூலி பணம் பிரிப்பதில் வீரப்பனுக்கும் சக தொழிலாளர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று இரவு வழக்கம்போல் வீரப்பன் அவரது அத்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
25ம் தேதி காலை வீ்ட்டை விட்டு சென்ற வீரப்பன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், மோளகவுண்டம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே தண்ணீர் இல்லாமல் உள்ள குட்டை பகுதியில் வீரப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கட்டையால் தலை மற்றும் உடலில் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வீரப்பனின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த.ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்திவேல், திருநாவுக்கரசு, கோகுல கிருஷ்ணன்ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து நடத்திய விசாரணையில், கூலி பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீரப்பனை மறைவிடத்திற்கு அழைத்து வந்து கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார்கள் என்பது போலீசின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் மூன்று பேரும் சேர்ந்து தான் இந்த கொலையை செய்தனரா?, இல்லை வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? வேறு ஏதாவது காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.