தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதியதில் ஆள்மாறாட்டம் செய்து கைதாகியிருக்கிறார் மாவட்ட பாஜக தலைவர். இந்த சூழலில் ஆள்மாறாட்டத்திற்கும் பாஜக மாவட்ட தலைவருக்கும் தொடர்பில்லை எனக் கருப்பு முருகானந்தம் போராட்டம் அறிவித்திருப்பது மீண்டும் திருவாரூர் பகுதியில் பரபரப்பாகியிருக்கிறது.
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகத்தின் தேர்வு நடைபெற்றது. திறந்தவெளி பல்கலையில் பொலிட்டிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்துவரும் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் எழுத வேண்டிய தேர்வை, அவருக்குப் பதிலாக திவாகர் மாதவன் என்பவரை கொண்டு எழுதியுள்ளார். இந்த ஆள்மாறாட்டம் ஆதாரங்களோடு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முறைகேடாக தேர்வு எழுதிய திவாகர் மாதவன், அவருக்கு உதவிய மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆள்மாறாட்ட முறைகேட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாவட்டத் தலைவர் பாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறிய போது, "தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மீது குற்றம்சாட்டி செய்திகள் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் பொய்யானது. இந்த குற்றச்சாட்டுகளை மாவட்ட தலைவர் பாஸ்கர் முழுமையாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளரிடம் நாங்கள் புகார் அளித்துள்ளோம். யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாநில தலைவர் உறுதியாக உள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. எனவே போலீசார் இந்த வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண்டும்" என்றார்.
அதேபோல், பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை 17ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக கருப்பு முருகானந்தம் அறிவித்துள்ளார்.