புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் மணல் எடுக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தநிலையில் முதல்கட்டமாக அதிகாரிகள் போலிஸ் பாதுகாப்புடன் சென்று பாதை அமைக்கும் பணியை முடித்துள்ளனர். ஆனால் மணல் அள்ளினால் எங்கள் விவசாயம் பாதிக்கும், குடிதண்ணீர் பாதிக்கும் என்று கிராம மக்கள் ஆங்காங்கே எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்த நிலையில்தான் அழியாநிலையில் நெடுவாசல் போராட்டம் போல ஆலமரத்தடியில் தொடர் போராட்டத்தில் அமர்ந்துவிட்டனர்.
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் ஆலங்கடி தொகுதியில் உள்ள அழியாநிலை கிராமத்தின் வழியாக ஓடும் வெள்ளாற்றில் முனிக்கோயில் திடல் அமைந்துள்ள இடத்தில் அந்த ஊர் பொதுமக்கள் கூட தங்கள் வீடுகளுக்கு மணல் எடுக்காத பகுதியான அங்கு சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் புதிய மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த குவாரி அமைக்கப்பட்டு அரசு கணக்கைவிட சுமார் 10 மடங்கு அதிகமாக மணல் அள்ளிவிடுவார்கள் அதனால் எங்கள் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அதன் பிறகு விவசாயம் அழிந்து குடிதண்ணீர் கூட கிடைக்காமல் காசு கொடுத்து தண்ணீா் வாங்க சாலைகளில் காத்துகிடக்கவேண்டும். அதனால் மணல் எடுக்க வேண்டாம் என்று 16 ந் தேதி காலை ஆலமரத்தடியில் போராட்டத்தை தொடங்கினார்கள்.
இந்த நிலையில் அதிகாரிகள் எந்த பதிலும் சொல்லாததால் போராட்டம் 2 வது நாளாக தொடர்ந்து. நாளுக்கு நாள் போராட்டத் திடலுக்கு சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் வருவது அதிகரித்துள்ளது. நாளையும் இந்த போராட்டம் தொடரும், அழியாநிலை மணல் குவாரி செயல்படாது என்று அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தினர் கூறி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை இன்றி போராட்டத்தை தொடரவிட்டால் நெடுவாசல் போராட்டம் போல மாதக்கணக்கில் நடந்துவிடும் என்பதால் அதிகாரிகள் ஆலொசனை செய்து வருகின்றனர். திடீரென போலிசாரை வைத்து கைது செய்யும் பணிகளும் நடத்தப்படலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கைது செய்தாலும் அடுத்தடுத்து போராட்டம் நடத்த மக்கள் வருவார்கள் என்று கிராம மக்கள் கூறி வருகின்றனர்