பரபரப்பான சூழல்களுக்கு மத்தியில் தமிழக சட்டமன்றத்தின் இந்த வருடத்திற்கான முதல் கூட்டத் தொடர், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நாளை துவங்குகிறது.
கவர்னர் உரை முடிந்ததும் எவ்வித விவாதமுமின்றி முதல் நாள் நிகழ்வுகள் முடிவு பெறும். அதன் பிறகு தனது தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில், சட்டமன்றத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதை விவாதித்து முடிவெடுப்பார் சபாநாயகர் தனபால். அதிகப்பட்சம் 5 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையிலிருந்து கவர்னர் உரை மீதான விவாதம் நடக்கவிருக்கிறது. இறுதி நாளில், கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலுரை வாசிப்பார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில், எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் வகையில் அவரது உரை இருக்கும். இப்படிப்பட்டச் சூழலில், குடியுரிமை சட்ட மசோதா, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், விலைவாசி உயர்வு, ஊழல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சபையில் எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.
அதற்கு பதிலடி தரும் வகையில் மூத்த அமைச்சர்களை தயார் படுத்தியிருக்கிறார் எடப்பாடி. மேலும், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான சட்டத்திருத்தம், புதிய மாவட்டங்களை உருவாக்குதல் தொடர்பான அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்களுக்கான ஒப்புதலைப் பெறவிருக்கிறது ஆளும் கட்சி. இதற்கிடையே, குடியுரிமைச் சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் கொடுத்திருக்கிறார்.
சட்டசபை விதிகள் 172-ன்படி 15 நாட்களுக்கு முன்பாக தீர்மானம் குறித்த கடிதத்தை சபாநாயகருக்கு தர வேண்டும். ஆனால், திமுக கொடுத்துள்ள கடிதம் விதிகளுக்குள் அடங்காததால் குடியுரிமைக்கு எதிரான தீர்மானத்தை சபாநாயகர் எடுத்துக்கொள்ளமாட்டார் என்கிறார்கள் பேரவை செயலக அதிகாரிகள். இப்படிப்பட்ட சூழலில், கவர்னர் உரையை புறக்கணிக்கலாமா? அல்லது கவர்னர் உரையை துவங்கியதும் சில பிரச்சனைகளை வலியுறுத்திவிட்டு வெளிநடப்பு செய்யலாமா? என திமுக தலைமை ஆலோசித்துள்ளது.