Skip to main content

அவரை நீக்கலாமே..? காங்கிரஸ் எக்ஸ் எம்.எல்.ஏ-விற்கு எதிராக போர்க்கொடி..!!!!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

"தொண்டன் முதல் தலைவர் வரை அனைவருக்கும் நியாயம் ஒன்று தானே..? நாங்கள் தவறு செய்தால் எங்களை கட்சியிலிருந்து நீக்கியிருப்பீர்களே..? முன்னாள் எம்.எல்.ஏ. என்றால் நடவடிக்கை இல்லையா..?கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட அவரை நீக்கலாமே..?" என ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரும், இரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர் சிவகங்கை மாவட்ட காங்கிரசார்.

 

congress


காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 1996ம் ஆண்டு த.மா.காங்கிரஸ் சார்பில் திமுக கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினரான சுந்தரம், அதற்கடுத்து 2006ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் அதே திமுக கூட்டணியால் சட்டமன்ற உறுப்பினரானார். காங்கிரஸிற்கு எதிரான நிலைப்பாட்டில் ப.சிதம்பரம் இருந்த பொழுது மூப்பனாருடன் இணைந்து த.மா.கா-வை துவக்கிய போதும், அதிலிருந்து வெளியேறி காங்கிரஸ் ஜனநாயக பேரவை துவக்கிய போதும், அதன் பின் மீண்டும் காங்கிரஸ் வந்த போதும் உடனிருந்த சுந்தரம் தற்பொழுது ப.சி.-க்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கம்பு சுற்றுவது தான் காங்கிரஸ் தொண்டர்களை கொதிப்படைய செய்துள்ளது. 

புதனன்று சிவகங்கை மாவட்டத்தில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்களான முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் தொகுதியின் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் இணைந்திருக்க, " சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு இணக்கம் தெரிவிக்காமல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரம் வாக்கு சேகரித்து வருகின்றார். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல்.! இவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை நீக்க வேண்டுமென," அனைவரின் கையிலும் முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரத்திற்கு எதிராக கண்டன தீர்மான கடித நகலை அளித்துள்ளனர் சிவகங்கை மாவட்ட காங்கிரசார். கடிதத்தைப் பெற்ற பொறுப்பாளர்களோ ஷாக்காகி புறப்பட்டது தான் ஹைலைட்டே.!

முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரத்திற்கு எதிராக கண்டனத் தீர்மானம் இயற்றி, கட்சியினரிடம் கையெழுத்து வாங்கிய சிவகங்கை மாவட்ட மனித உரிமைத்துறை மாவட்டத்தலைவரான கல்லல் ரமேஷோ., " அவர் விசுவாசமாக இருந்தார் என்பதால் கடைமட்டத் தொண்டனான அவரை இரண்டு தடவை எம்.எல்.ஏ-வாக்கி அழகுப் பார்த்தார் தலைவர் ப.சிதம்பரம். அந்த நன்றி இப்பொழுது இல்லை..! தலைவர் ப.சி., எம்.எல்.ஏ.ராமசாமி, எம்.பி.கார்த்தி சிதம்பரம், மாநிலத் தலைவர் மற்றும் இப்பொழுது வந்த தேசிய செயலாளர்கள் அனைவரும் சங்கராபுரம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கையில், இவர் மட்டும் ஏன் எதிரணி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யனும்..? இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் இல்லையா.? தலைவனுக்கு ஒரு நியாயம்.! தொண்டனுக்கு ஒரு நியாயமா.? அதனால் தான அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சித்தலைமைக்கு கோரிக்கை வைத்தோம்." என்கிறார் அவர். இக்கடிதத்தால் மாவட்ட காங்கிரசார் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்