சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் 1000 கிலோ 'நாய்கறி' வந்திறங்கியதாகவும் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சென்னை கறிகணேஷ் என்பரில் பெயரில் வந்த நாய்க்கறியை உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், இரயில்வே போலீஸும் கண்டுபிடித்து விசாரணை நடத்திவருவதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.
இதுகுறித்து, சென்னை எழும்பூர் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனிடம் நாம் பேசியபோது, "சென்னை ஹோட்டல்களுக்கு வெளிமாநிலங்களிலிருந்து ஆடு, மாடு இறைச்சிகள் இரயிலில் வருவது வழக்கமானது. ஆனால், ஃபுட் சேஃப்டி ஆஃபிசர்கள் (உணவு பாதுகாப்பு அதிகாரிகள்) இன்று ஆய்வு செய்யவேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுக்கு, ஏதோ இரகசிய தகவல் கிடைக்காமல் இப்படி ஆய்வு செய்திருக்கமாட்டார்கள். வந்தது நாய்க்கறிதானா? என்பதை அவர்கள்தான் ஆய்வு செய்து உறுதியாக சொல்லமுடியும்" என்றார்.
நாம், அதிரடி ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி(எஃப்.எஸ்.ஓ.) சதாசிவத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, "நாய்க்கறிதான் என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. பறிமுதல் செய்த கறியை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதன், முடிவு வந்தால்தான் நாய்க்கறியா என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்லமுடியும்" என்றார்.
அதிரடி ரெய்டு செய்த காவல்துறையும், உணவுப்பாதுக்காப்புத்துறையும் உறுதிபடுத்தும்வரை இச்செய்திகள் அசைவப் பிரியர்கள் அச்சப்படவேண்டாம்.