தமிழகத்தில் காலியாகவுள்ள 1,058 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, கடந்தாண்டு ஜூலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த தேர்வை 1 லட்சத்து 33,567 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாகி சான்றிதழ் சரிபார்ப்பின் போது மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண்களை மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டு தேர்வாணயத்தை சேர்ந்தவர் கொடுத்த புகாரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். முக்கியமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கடைசி வரை தலைமறைவாகவே இருந்து முன்ஜாமீன் பெற்றனர். இந்த நிலையில் ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதித்துறை) சார்பில், தாமாக முன்வந்து பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.
அதில், `ஆசிரியர் தேர்வு வாரியம், டிஎன்பிஎஸ்சி, நெட், செட் உள்ளிட்ட தேர்வுகளின் போது பல லட்சம் பணம் கொடுத்து பலர் வேலை பெறுகின்றனர். இதில், அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதால் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர், மனு மீதான விசாரணையை ஜூன் 11க்கு தள்ளி வைத்தனர்.
அதே நேரத்தில் தமிழக அரசு இந்த பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால் இந்த தேர்வை ரத்துசெய்கிறோம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதை எதிர்த்து தேர்வு எழுதிய மாணவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறைகேடு செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்த பின்பு அதையே காரணம் ஆக்கி ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது என்பது சரியில்லை இது யாரையோ காப்பாற்றும் முயற்சி என்று வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் தேர்வு ரத்து உத்தரவை ரத்து செய்தது.
அதே நேரத்தில் இதே மாதிரியான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் தொடுத்த வழக்கில் தமிழக அரசு தேர்வை ரத்து செய்தது சரி தான் என்று தீர்ப்பளித்தனர். இதை தீர்ப்பை பார்த்ததும் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரே மாதிரியான வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பும், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பும் வழங்க முடியும் என்று கொதிப்படைந்து யார் தவறு செய்தார்கள் மதிப்பெண்ணை என்பதை கண்டுபிடித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்றுவதற்கு இந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குலூவாடி ரமேஷ், மற்றும் தண்டபாணி கொண்ட உயர்நீதிமன்ற பெஞ்ச் நேற்று விசாரித்தது. இதே மாதிரியான வழக்கு மதுரை கிளையிலும் மனுக்கள் உள்ளன. அவை எல்லாவற்றையும் சேர்த்து அடுத்த வாரம் விசாரிக்கிறோம் என்று அறிவித்தனர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தி.மு.க. செயல்தலைவர் பாலிடெக்னிக் முறைகேடு பிரச்சனையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் இதில் கீழ் மட்டத்தில் உள்ள சாதரணமான ஆட்களை கைது செய்து விட்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு ஆளும் கட்சியினருக்கு தொடர்பு இருந்தும் அவர்களை விட்டுவிட்டனர். தற்போது இவர்களை காப்பாற்றி கொள்வதற்காக தேர்வை ரத்து செய்திருக்கிறார்கள். முறையாக தேர்வு எழுதிய மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 5 மாதங்களுக்கு பிறகு தற்போது உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.