நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதில் ஏதேனும் விதிமீறல் நடந்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
சேலம் இரும்பாலை அருகே உள்ள தமிழ்நாடு அரசு மருந்துக் கழக கிடங்கில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஞாயிற்றுக்கிழமை (அக். 16) ஆய்வு செய்தார். மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மருந்துகள் கையிருப்பு பட்டியலை அட்டவணையாக வெளியே வைக்கவும் அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து அவர் ஊடகங்களிடம் கூறியதாவது; “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு இல்லை. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே மருந்துகளை வாங்கி வர வேண்டிய நிலை உள்ளதாக கூறி உள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் மருத்துவப் பணிகள் கழகத்தை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறியதில் எதுவும் உண்மை இல்லை. போதுமான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளது. எந்த நோயாளியையும் வெளியில் இருந்து மருந்து வாங்கி வருமாறு கூறவில்லை. தமிழகத்தில் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. ஒரு சில மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவர்களே வாங்கிக்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் இருந்தால் சேலம் அரசு மருத்துவமனை, மருந்து கிடங்கில் நேரில் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம். அதற்கு அனுமதி தருகிறோம்.” இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
இதையடுத்து அவரிடம், வாடகைத் தாய் மூலம் நடிகை நயன்தாரா குழந்தை பெற்றதில் விதிமீறல் உள்ளதாக கூறப்படும் புகார் குறித்து கேட்டதற்கு, ''இது தொடர்பாக 4 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் விசாரித்து வருகின்றனர். விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு, விதிமீறல் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இந்த நிகழ்வின்போது எம்.எல்.ஏ ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.