விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீழ் தணியாலம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி எழுபது வயது மூதாட்டி குப்பு. வசதி வாய்ப்பு சொத்து பத்து இல்லாமல் வறுமையில் வாழும் குப்பு ஆடுகளை வளர்த்து, அதை விற்று தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார். குப்பு 19 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றவர் மாலை வீட்டுக்கு அருகில் கொண்டு வந்து கட்டி விட்டு இரவு சாப்பிட்டு படுத்து தூங்கி விட்டார். அதிகாலை சுமார் 3 மணி அளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் திடுக்கிட்டு எழுந்த குப்பு வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது ஒரு நான்கு சக்கர வாகனத்தில் சில மர்ம மனிதர்கள் அவரது ஆடுகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குப்பு திருடன்.. திருடன்.. என்று சத்தம் போட்டுள்ளார். இவரது குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சுதாரித்துக்கொண்ட திருடர்கள் திருடிய ஆடுகளை நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். குப்பு அடைத்து வைத்திருந்த 19 ஆடுகளில் 15 ஆடுகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். மிச்சம் இருந்த 4 ஆடுகளை கட்டிப்பிடித்துக் கொண்டு என் உழைப்பெல்லாம் போச்சே என்று கூறி கதறி அழுதார் குப்பு. இந்த காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் குப்பு அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நான்கு சக்கர வாகனத்தில் வந்து குப்புவின் ஆடுகளை திருடி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.