நெல்லை மாவட்டத்தின் சுத்தமல்லி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் மார்க்க ரெட் தெரசா. இவர், இதே மாவட்டத்தின் வி.கே.புரம் நகரைச் சேர்ந்தவர். 2016ன் போது டைரக்ட் எஸ்.ஐ.யாகப் பயிற்சிக்குப் பின் பணியில் சேர்ந்தவர், கடந்த ஒராண்டாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணியிலிருக்கிறார். மார்க்க ரெட் தெரசா பணியில் சேர்ந்தது முதல் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை சிறப்பாகச் செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே காவல் லிமிட்டின் பழவூர் பால் பண்ணைத் தெருவைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் ஆறுமுகம் (40) குடிபோதையில் பைக்கை ஒட்டி வந்திருக்கிறார். அது சமயம் வாகனச் சோதனையிலிருந்த எஸ்.ஐ. மார்க்க ரெட் தெரசா, பைக்கில் வந்த ஆறுமுகத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் குடிபோதையில் பைக் ஓட்டி வந்தது தெரியவந்து. அதனால், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக பத்தாயிரம் அபராதம் கொண்ட வழக்குப் பதிவு செய்திருக்கிறார். அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
தன் மீது குடிபோதைக்கான பத்தாயிரம் அபராதக் கேஸ் போட்டதால் பெண் எஸ்.ஐ. மீது கடுமையான ஆத்திரத்திலிருந்திருக்கிறார் ஆறுமுகம். திருமணம், ஆலய விழாக்கள் மற்றும் பொது இடங்களில் ப்ளக்ஸ் போர்டுகள் கட்டுகிற கூலித் தொழிலாளியான ஆறுமுகம் தொழிலின் பொருட்டு தன்னுடன் எப்போதும் மடக்கு கத்தி வைத்திருப்பவராம்.
இந்தச் சூழலில் பழவூரிலுள்ள உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை திருவிழாவின் பாதுகாப்பு பொருட்டு எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசா உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு சென்றிருக்கிறார்கள். அது சமயம் கொடை விழாவிற்கு ஆறுமுகமும் வந்திருக்கிறார். எஸ்.ஐ.யைப் பார்த்ததும் பழி வெறியில் ஆத்திரமாகியிருக்கிறார். ஆனால் பெண் எஸ்.ஐ.யோ ஆலய பாதுகாப்பின் கவனத்திலிருந்திருக்கிறார்.
நடு இரவு 12.45 மணியளவில் எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசா, விழாநடக்குமிடத்தின் ஒரத்தில் நின்றிருந்த போது திடீரென்று தன் மடக்குக் கத்தியோடு பாய்ந்து வந்த ஆறுமுகம், ‘என்னய அண்னைக்கி டிரங்க் அன்ட் டிரைவ் கேஸ் போட்டு அபராதம் போட்டவதான நீ. ஒன்னயக் கொல்லாம விடமாட்டேன்’ என்று கத்தியவர் தன் கத்தியால் எஸ்.ஐ.யை வெட்ட முயல, எதிர்பாராமல் வந்தவரைக் கண்டு சுதாரித்த பெண் எஸ்.ஐ. தனது கையால் தடுக்க, வெட்டு அவரது தலையில் விழாமல் போக, வெறியானவன் எஸ்.ஐ.யின் கன்னம், கழுத்து, நெஞ்சுப் பகுதிகளில் குத்திக் கீறியிருக்கிறான். படுகாயமுற்ற எஸ்.ஐ. கதறியபடி மயங்கிச் சரிந்திருக்கிறார். உடனே அருகிலிருந்த சக போலீசார் அறுமுகத்தை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள். சம்பவத்தால் பதறிய போலீசார் வெட்டுக்காயங்களோடு மயங்கிய எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசாவை சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே பிடிபட்ட அறுமுகத்தை சுத்தமல்லி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போலீசாரிடம், “எஸ்.ஐ. எம்மேல டிராங்க் அன் டிரைவ் கேஸ் போட்டு பத்தாயிரம் அபராதம் போட்டதால, ஆத்திரத்தில் வெட்டினேன்” என்று தெரிவித்திருக்கிறாராம்.
பெண் எஸ்.ஐ.யை வெட்டிக் கொல்ல முயன்ற தகவலால் நெல்லை காவல்துறையே பரபரப்பானது. தகவலறிந்த நெல்லை மாவட்ட எஸ்.பியான சரவணன் பின்னிரவு இரண்டு மணியளவில் பாளை அரசு மருத்துவமனைக்குச் சென்றவர் சிகிச்சையிலிருந்த எஸ்.ஐ.மார்க்கரெட் தெரசாவுக்கு ஆறுதல் தெரிவித்து, நடந்தவைகளைக் கேட்டறிந்தார்.
எதிர்பாராமல் தன்னை வெட்ட முயன்ற போது சுதாரித்து சமயோஜிதமாக எஸ்.ஐ. தடுத்திருக்கிறார். அதனால் அவரது கன்னம் நெஞ்சுப் பகுதியில் வெட்டு விழுந்திருக்கிறது. குடி போதையில் வாகனம் ஒட்டியதால் அபராதம் விதித்ததற்காக இப்படி செய்தேன் என்றிருக்கிறார் என்று நம்மிடம் பேசினார் எஸ்.பி.சரவணன்.
பெண் எஸ்.ஐ.யின் துணிச்சல். பணியில் சுறுசுறுப்பாகவும் அலர்ட் ஆகவுமிருக்கும் எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசா கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கொண்டாநகரம் ரயில்வே பகுதியில் ரவுண்ட்சிலிருந்து திரும்பியிருக்கிறார். அது சமயம் ரோட்டோரம் ஒரு பெண்ணிடம் தகராறு செய்த ஒரு தரப்பினர் அவளை அரிவாளால் வெட்ட முயல, அதைப் பார்த்தப் பதறிய எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசா, துளி அச்சமின்றி துணிந்து அரிவாள் கும்பலை அடித்து விரட்டி அந்தப் பெண்னைக் காப்பாற்றியவர் கூடவே அரிவாள் ஆசாமிகளையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.
பெண் எஸ்.ஐ.க்கு நடந்தவைகளைக் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலினும் உடனடியாக எஸ்.ஐ. மார்க்கரெட் தெரசாவைத் தொடர்பு கொண்டு பேசி, அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.
வன்மம், பழிவாங்கல் சம்பவத்தால் பதற்றத்திலும் அதிர்ச்சியுலுமிருக்கிறது காவல் துறை வட்டாரங்கள்.