நெல்லையில் நீதிமன்ற வளாகத்திலேயே நிகழ்ந்த கொலை சம்பவம் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று 20/12/2024 காலை நெல்லை நீதிமன்றத்தில் வாயில் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை நீதிமன்றம் இந்த கொலை சம்பவத்தை கேள்விப்பட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் குமாரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு பிற்பகல் 4:30 மணிக்கு வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர்.
'நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்ற ஒரு கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அருகிலேயே 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்துள்ளார்கள் ஆனால் ஏன் தடுக்கவில்லை? ஒரு குற்றம் நடைபெறும் பொழுது அதை தடுக்க முயல வேண்டுமே தவிர, குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளை தேடுகிறோம் என்று சொல்வதில் என்ன நியாயம் உள்ளது' என்றார். அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞர், 'இந்த கொலை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
அதற்கும் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். 'சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் குற்றவாளிகள் தப்பி ஓடாமல் அவர்களை முட்டிக்கு கீழே காலில் சுட்டுப் பிடித்திருக்கலாம். இல்லையென்றால் அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற வாகனத்தின் டயர்களை சுட்டு நிறுத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் சம்பவ இடத்திலேயே குற்றவாளிகளை அங்கேயே கைது செய்திருக்கலாம். தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள் அனைத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அது கடைபிடிக்கப்பட வேண்டும். நாளை நீதிபதிக்கும் இதேபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால் நீங்கள் இப்படித்தான் வேடிக்கை பார்ப்பீர்களா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
'இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. எனவே இந்த வழக்கை நாளை பிற்பகல் 4.30 மணிக்கு ஒத்திவைக்கிறோம். நாளை விரிவான அறிக்கையை தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். காவல்துறை தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; மாவட்ட நீதிமன்றங்களில் எந்த வகையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.