Skip to main content

சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பா.ஜ.க.வினர்... அச்சத்தில் பொதுமக்கள்!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

loot

 

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் பட்டப்பகலில் நுழைந்த பா.ஜ.க.வினர் பொருட்களை சூறையாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில், ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட், ரஃபீகா என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இருவருக்கும் வாடகை தகராறு ஏற்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடையைக் காலி செய்யக் கூறி ரஃபீகா அடிக்கடி கடைக்கு வந்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒப்பந்தப்படி ஷாநவாஸ் கடையைக் காலி செய்ய 2 வருடங்கள் கால அவகாசம் இருப்பதாகக் கூறிய ஷாநவாஸ் தரப்பு, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கடையைக் காலி செய்ய மறுத்துள்ளனர். 

 

இவர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், இன்று காலை ஊழியர்கள் வந்து கடையை திறந்த கொஞ்ச நேரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கடைக்குள் நுழைந்து சுத்தியல், ஸ்பேனர் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களை அடித்து நொறுக்கி, பொருட்களை சூறையாடத் தொடங்கியுள்ளனர். ஊழியர்கள் 6 பேர் மட்டுமே இருந்த நிலையில் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்ட குதுப் எனும் ஊழியரை தள்ளிவிட்டு, வாடிக்கையாளர்களை வெளியே செல்லுமாறு மிரட்டி உள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் நெஞ்சுவலி ஏற்பட்ட ஊழியர் குதூப்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மற்ற ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

 

BJP- party-men looted- supermarket-Public in -fear

 

காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் சூறையாடிய பொருட்களோடு தப்பிச் சென்றுவிட, கடைக்குள் இருந்த 11 பேரை மட்டும் காவல்துறையினர் பிடித்து ஆயிரம் விளக்கு காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதற்கட்ட விசாரணையில் 11 பேரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதில், தென்சென்னை இலக்கியப் பிரிவு மாவட்டச் செயலாளரான குணசேகரன் என்பவர்தான் முக்கிய நபர் என்பதும், மீதமுள்ள 10 பேரும் டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் யாருடைய தூண்டுதலின் பேரில் இந்தச் செயலில் ஈடுபட்டனர், ரஃபீகாவுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா எனக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Ad

 

குறிப்பாக இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி.காட்சிகள் சிக்கி விடக்கூடாது என்கிற நோக்கத்தில் கடையை சூறையாடிய கும்பல், சி.சி.டி.வி காட்சிகளை சேமித்து வைக்கும் டி.வி.ஆர்-ஐ எடுத்துச் செல்வதற்கு பதிலாக கம்பியூட்டர் சி.பி.யு.வை திருடிச் சென்றதால், சி.சி.டி.வி டி.வி.ஆர் போலீசாரிடம் சிக்கியுள்ளது. 

 

பட்டப் பகலில் நடந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்