இ.டி, ஐ.டி ரெய்டுக்கு வந்தால் காபி, விருந்து எல்லாம் வைத்து உபசரிப்போம் எனத் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''ஆளுநருக்கு நிறைய கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் கொஞ்சம் கோப்புகளுக்கு அனுமதி தந்திருக்கிறார். இன்னும் சில கோப்புகளுக்கு அனுமதி தரவில்லை. இஸ்லாமிய வாசிகளை பொறுத்தவரை நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை போல எந்த அரசும் எடுக்கவில்லை. அதைத்தான் நான் சொல்ல முடியுமே தவிர வேறு எதையும் சொல்ல முடியாது.
முன்கூட்டியே விடுதலை என்பதற்காக நாங்கள் எடுத்த நடவடிக்கைகளில் கோப்புகள் கையெழுத்தாகி வந்திருக்கிறது. இன்னும் கையெழுத்தாக வேண்டிய கோப்புகள் ஆளுநரிடம் இருக்கிறது. அதேபோல் எங்களிடமிருந்து ஆளுநருக்கு அனுப்பப்பட வேண்டிய கோப்புகளும் இருக்கின்றன. ஓபிஎஸ் இபிஎஸ் இருவருமே அதிமுகவை பாஜகவிடம் ஒப்படைத்த கொத்தடிமைகள். எங்களை பொறுத்தவரை இவர்கள் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. எங்களை பொறுத்தவரை கொடநாடு வழக்கில் எங்களுடைய முதல்வர் எடுத்த நடவடிக்கை தான் இவ்வளவிற்கும் காரணம்.
எந்த நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்ய வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் முன்பே சொல்லிவிட்டோம். வரட்டும் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை கிடையாது. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். இ.டி, ஐ.டி ரெய்டுக்கு வந்தால் காபி, விருந்து எல்லாம் வைத்து அவர்களை உபசரிக்கவும் தயாராக இருக்கிறோம்'' என்றார்.