Skip to main content

'நானும் மைதானத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்'-நடராஜன் நெகிழ்ச்சி

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 'I felt like I was on the field too' - Natarajan

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதிய இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. பார்படாசில் நடந்த இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் சாலையில் கூடி நின்று பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டுக்குப் பின் ஐசிசி தொடரில் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகேந்திர சிங் தோனி, 'போட்டியில் இதயத்துடிப்பு எகிறிய போதும் வீரர்கள் நம்பிக்கை உடன் செயல்பட்டனர். இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது என அணி வீரர்களுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார். கடைசி வரை பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வாகை சூடியுள்ளது. அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

 'I felt like I was on the field too' - Natarajan

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'ஒவ்வொரு தருணமும் மிக முக்கியமாக இருந்தது. நானும் மைதானத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்