இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தெற்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதீஷ். 35 வயதான இவர், மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதனை கொஞ்சமும் மதிக்காமல், தனது இருசக்கர வாகனத்தில் வாலாஜா நகரை சுற்றி சுற்றி வந்துள்ளார்.
![I am worse than Corona - 144 Hindu People's Party person arrested for not following orders](http://image.nakkheeran.in/cdn/farfuture/N9nocHUqwdla14fk-r0t9YTn3enxdFae2Cnd-lhzxds/1585913543/sites/default/files/inline-images/IMG-20200403-WA0016.jpg)
வாலாஜா, இராணிப்பேட்டை என வலம் வந்த அவரை மடக்கி வீட்டுக்கு செல்லுமாறு கண்காணிப்பு போலீஸார் பல முறை அறிவுறுத்தியுள்ளனர். அதனை மதிக்காமல், நீ யார் என்னை கேள்வி கேட்க, நான் மா.செ, சட்டம்மெல்லாம் என்னை ஒன்னும் செய்ய முடியாது என காவலர்களிடம் எகிறியுள்ளார் சதிஷ்.
அதோடு, நான் கரோனாவை விட பயங்கரமானவன், நீங்கள் யார் எனக்கு உத்தரவு போடுவது என்று போலீசாரிடம் காட்டமாக பேசியுள்ளார். இந்த தகவலை ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனத்திடம் தெரிவித்துள்ளனர், வாலாஜா காவல்துறை அதிகாரிகள். இதனையடுத்து 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றியது, கேள்வி எழுப்பிய போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த வாலாஜாபேட்டை நகர போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவருக்கு சொந்த ஜாமினில் வெளியே அனுப்பினர். இது வாலாஜாவில் எந்த வேலையும் இல்லாமல் பைக் எடுத்துக்கொண்டு சுற்றுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.