திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 23.11.2019 மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம் தலைவர் மற்றும் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு. சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில், உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழுவின் இணைத் தலைவர் மற்றும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர். எம். கே. விஷ்ணுபிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), மு.பெ. கிரி (செங்கம்), கே. வி. சேகரன் (போளுர்) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம் மத்திய அரசின் நெறிமுறைகளுக்கு ஏற்றபடி, திட்ட செயல்பாடுகள் குறித்தும் உரிய செலவினங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று 23.11.2019 மத்திய, மாநில அரசின் திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மத்தியரசின் வேலை உறுதியளிப்பு திட்டம், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம், கழிவறை திட்டம், குடிநீர் திட்டம், முதியோர் உதவித்தொகை போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கேள்விகளாக எழுப்பினர். இதற்கு சரியான பதில்களை சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள்.
வேளாண்மையை மட்டும்மே நம்பியுள்ள இந்த மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் செய்யப்படும் திட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு சரியான முறையில் சொல்வதில்லை என்பதையும் எடுத்துச்சொன்னார்கள்.
அதேபோல் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கு பைபாஸ் சாலை அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. ஊரக சாலைகள் சரியாக அமைக்காதது போன்றவற்றையும் சுட்டிக்காட்டினர் மக்கள் பிரதிநிதிகள்.
அதோடு, திட்டங்கள் செய்துள்ளோம் என புள்ளிவிபரங்களை தந்துள்ளீர்கள், அது எங்கங்கு செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி அதுப்பற்றிய தகவல் எங்கே என கேட்டபோது, துறை அதிகாரிகள் தருகிறோம் எனச்சொன்னார்களே தவிர அதுப்பற்றி விளக்கமாக எதையும் சொல்லவில்லை. நீங்கள் எங்கங்கு என்னன்ன பணிகள் செய்துள்ளீர்கள் எனச்சொன்னால் தானே, நாங்கள் செய்துள்ளார்களா என ஆய்வு செய்ய முடியும் என்றார்கள்.
கூட்டம் பற்றி இறுதியாக பேசிய குழு தலைவர் எம்.பி அண்ணாதுரை, இந்த கூட்டம் எனக்கு முழு திருப்தியை தரவில்லை. 3 மாதத்துக்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். அடுத்த கூட்டம் நடைபெறும்போது துறைவாரியாக செய்துள்ள பணிகள் முழு விபரம் தேவை என்றார்.
இந்த கூட்டத்தில் மாநிலத்தை ஆளும் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யார் எம்.எல்.ஏ தூசி.மோகன், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.