திண்டுக்கல்லில் திமுக கிழக்கு மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு கழக துணைப் பொதுச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் மேற்கு மாவட்டச் செயலாளரும், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உள்பட மாவட்டம், நகரம், ஒன்றியம்,பேரூர் கழகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது,'' தமிழகத்தை பாதுகாக்கும் தலைவராகவும், இயக்கத் தலைவராகவும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள தலைவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிதான் வெற்றி பெற்றோம். ஆனால் இரண்டு அமைச்சர்களை ஸ்டாலின் கொடுத்து இருக்கிறார். அதற்கு காரணம் கலைஞர் காலத்திலும் சரி மு.க.ஸ்டாலின் காலத்திலும் சரி திண்டுக்கல் என்றாலே ஆழமான பாசம் உள்ளது.
நமது மாவட்டம் சிறிய மாவட்டம் தான் இருந்தாலும் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுத்தார். அந்த மாநாட்டுக்கு ஒட்டன்சத்திரம் தொகுதியின் பங்கு அதிகமாகவே இருந்தது. நாம் வெற்றிபெற்ற பின் கரோனா, வெள்ளம், உள்ளாட்சித் தேர்தல் என தொடர்ந்து ஒன்றரை வருடம் ஓடிவிட்டது. அதனால ஒன்னும் செய்ய முடியவில்லை இனி வரும் காலங்களில் லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர முதல்வர் உறுதியாக இருக்கிறார். தற்பொழுது கூட்டுறவுத்துறை மூலம் 6500 பணியிடங்கள் நிரப்ப இருக்கிறோம். இதில் 300 பேருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்கு. அதுபோல் சத்துணவுத் துறையிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2000 இடம் காலியாக உள்ளது. அதையும் நிரப்ப இருக்கிறோம். அதுபோல் நெடுஞ்சாலைத் துறை உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கிடையாது. இயக்கத்தில் யாருக்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்று நினைக்க வேண்டாம் நிச்சயம் மாற்றம் வரும். நம் மீது அவதூறு பரப்பி வரும் வருபவர்களுக்கு இளைஞர் அணிதான் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் நான் தான் எம்.எல்.ஏ. எல்லா தொகுதிகளுக்கும் வந்து இளைஞர்களை சந்திப்பேன் கழகத்தின் ஒவ்வொரு வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம். நாங்கள் இல்லை. தங்களின் உழைப்பு மூலம்தான் எனக்கு தலைவர் துணைப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்திருக்கிறார். அதேபோல் மாவட்டத்தில் உழைத்தவர்களுக்கு பதவிகளை தேடிக் கொடுக்கிறோம். இங்குள்ள மேயர் பதவி வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்கவில்லை ஆனால் உழைத்தவர்களுக்கு நாங்களே பதவிகளை தேடி கொடுத்திருக்கிறோம். இப்படிதான் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூலம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவிகளை தேடி கொடுத்திருக்கிறோம். தனக்கு பதவி கிடைக்கவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். கிராமங்களில் கட்சியை பலப்படுத்த அனைவரும் அங்கங்கே இருக்கக்கூடிய பிரச்சனைகளை எடுத்து மக்களுக்கு சேவை செய்து கட்சியை வளர்க்க வேண்டும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம்'' என்றார்.