!["I am going to publish my reports as a book" - Sarathkumar interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/1z7sS_OlSfcmvDCsPtGkVS3448BTZB0WZDRxBd9NiXw/1666263859/sites/default/files/inline-images/n21598.jpg)
ஜெ.மரணம் தொடர்பான அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கைகள் வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் இதுகுறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத்குமார் இது குறித்த கேள்விக்கு ''நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. ஆறுமுகசாமி கமிஷன் வெளியிட்ட அறிக்கை தமிழில் 480 பக்கங்களும் ஆங்கிலத்தில் 600 பக்கங்களும் கொண்டது. பத்திரிகைகளில் புல்லட் பாயிண்ட்ஸ் மாதிரி வெளியான தகவல்களை படித்திருந்தேன். அறிக்கையை இன்னும் இரண்டு மூன்று தினங்களுக்குள் முழுமையாக படித்துவிட்டு இதற்கான அறிக்கையை வெளியிடுவேன். அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை கிட்டத்தட்ட 3,000 பக்கங்களைக் கொண்டது. எனவே ஜஸ்ட் பத்திரிகையில் படித்ததை வைத்து மட்டும் கருத்து சொல்லிவிட முடியாது. முழுமையாகப் படிக்கவில்லை என்றால் இந்தப் பக்கத்தில் இதை படித்தீர்களா என்று கேட்டால் தெரியாமல் போய்விடும். நிச்சயம் படித்துவிட்டு அறிக்கை வெளியிடுவேன். இந்த 15 ஆண்டு காலத்தில் 4 ஆயிரம் அறிக்கை கொடுத்திருக்கிறேன். அந்த அறிக்கைகளை ஒரு புத்தகமாகவே வெளியிடலாம் என முடிவு செய்துள்ளேன்'' என்றார்.
இந்தி திணிப்பு தொடர்பான கேள்விக்கு ''இந்தி திணிப்பு கூடாது. ஆனால் இந்தியை எதிர்க்கவில்லை. அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை முடிவும்கூட. இந்தியை தெரிந்துகொள்வது தப்பு கிடையாது. இந்தியைத் திணிப்பதுதான் தவறு'' என்றார்.